விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய புனே மாவட்ட துணை கலெக்டர் கைது

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய புனே மாவட்ட துணை கலெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.38¼ லட்சம் சிக்கியது.

Update: 2018-03-10 22:04 GMT
புனே,

புனே மாவட்ட துணை கலெக்டராக இருப்பவர் ஸ்ரீபதி மோரே. சம்பவத்தன்று விவசாயி ஒருவர், நிலப்பிரச்சினை தொடர்பாக துணை கலெக்டர் ஸ்ரீபதி மோரேயை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். விவசாயியின் மனுவை பரிசீலித்த ஸ்ரீபதி மோரே ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நிலப்பிரச்சினையை உடனடியாக முடித்து வைப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி சம்பவம் குறித்து புனே மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் துணை கலெக்டரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக விவசாயியிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்துடன் விவசாயி நேற்று முன்தினம் புனே கலெக்டர் அலுவலகம் சென்று துணை கலெக்டர் ஸ்ரீபதி மோரேவை சந்தித்தார்.

அப்போது, துணை கலெக்டர் ஸ்ரீபதி மோரே பணத்தை தனது அலுவலகத்தில் உள்ள அதிகாரி ராம்சந்திராவிடம் கொடுக்கும்படி தெரிவித்தார். இதையடுத்து விவசாயி அவரிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி ராம்சந்திராவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் துணை கலெக்டர் ஸ்ரீபதி மோரேவும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 2 பேரையும் அங்குள்ள கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு 2 பேரையும் 13-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார் புனே வட்காவில் உள்ள துணை கலெக்டர் ஸ்ரீபதி மோரே வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டில் இருந்து ரூ.38 லட்சத்து 38 ஆயிரம் சிக்கியது.

மேலும் சோலாப்பூரில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்