ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மந்திராலயா அதிகாரி சிக்கினார்

லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு உதவி என்ஜினீயரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மந்திராலயா அதிகாரி உறவினருடன் பிடிபட்டார்.

Update: 2018-03-10 21:42 GMT
மும்பை,

துலே பகுதியில் பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் வினோத் அர்ஜூன். இவர், கடந்த 2013-ம் ஆண்டு நிலப்பிரச்சினை தொடர்பாக ஒருவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பிடிபட்டார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல உதவி என்ஜினீயர் வினோத் அர்ஜூன் மீது துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த விசாரணையை மந்திராலயாவில் வருவாய் துறை இணை செயலாளராக பணியாற்றி வரும் பிரபாகர் பவார் என்பவர் மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில், உதவி என்ஜினீயர் வினோத் அர்ஜூனுக்கு சாதகமான வகையில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க மந்திராலயா அதிகாரி பிரபாகர் பவார், அவரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு வினோத் அர்ஜூன் ரூ.25 ஆயிரம் தருவதாக கூறினார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத வினோத் அர்ஜூன் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த யோசனையின்படி, வினோத் அர்ஜூன் சம்பவத்தன்று ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை பிரபாகர் பவாரிடம் கொடுக்க சென்றார். அப்போது பிரபாகர் பவார் லஞ்சப்பணத்தை தனது உறவினர் பிரசாந்திடம் கொடுக்குமாறு கூறினார்.

இதையடுத்து உதவி என்ஜினீயர் லஞ்சப்பணத்தை பிரசாந்திடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கி அவர் பையில் வைத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரசாந்தை கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் மந்திராலயா அதிகாரி பிரபாகர் பவாரும் சிக்கினார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்