மான் வேட்டையாடிய 6 பேர் கைது 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

அஞ்செட்டி அருகே மான் வேட்டையாடிய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-03-10 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள உரிகம் சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் உரிகம் வனச்சரகர் திருமுருகன், வனவர் பழனிமுருகன், வனவர்கள் வேணு, சென்றாயன், வனக்காப்பாளர் மாணிக்கம் மற்றும் வனக்காவலர்கள் ஒரு குழுவாகவும், அஞ்செட்டி வனச்சரகர் தனபால், வனக்காப்பாளர்கள் சிவக்குமார், முனுசாமி மற்றும் வனத்துறையினர் ஒரு குழுவாகவும் பிரிந்து உரிகம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

காவேரிப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல், 2 நாட்டுத்துப்பாக்கிகளுடன் சென்றது. இதைப் பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 50 கிலோ மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அஞ்செட்டி அருகே உள்ள தாம்சனப்பள்ளியை சேர்ந்த திம்மய்யா (வயது 24), மாதப்பா என்கிற குருவன் (54), ஒண்டியூரை சேர்ந்த கார்த்திக் (25), ராஜேந்திரன் (42), வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (35), ஏணிபண்டா கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் (45) என்பதும், வனப்பகுதியில் மானை வேட்டையாடி கர்நாடக மாநிலத்தில் விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து திம்மையா உள்பட 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. உரிமம் இல்லாத 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்