உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-03-10 22:45 GMT
குடவாசல்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குடவாசல் வட்டார கிளை சார்பில் கொடியேற்றுதல் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா, புதிய உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, இயக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று குடவாசலில் நடந்தது. விழாவிற்கு வட்டார தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்ட செயலாளர் ஈவேரா, ஓய்வு பெற்றோர் அணி மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் துணை பொதுச்செயலாளருமான ரெங்கராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதிய ஓய்வூதியத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தினை அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், வட்டார உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அலுவலக பணிகளை முடிக்க காலதாமதம் ஏற்படுகிறது. எனவே உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தொடக்கக்கல்வித்துறையினை கலைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வருகிற (செப்டம்பர்) மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் உலக தமிழாசிரியர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 500 தமிழாசிரியர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரை சமர்பிக்க உள்ளனர். மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கூட்டணியை சேர்ந்த 200 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், ஓய்வு பிரிவு மாவட்ட தலைவர் நாராயணசாமி, ஓய்வு பிரிவு மாவட்ட பொருளாளர் ஞானசேகரன், கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜூலியஸ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜோன்ஸ்ஐன்ஸ்டீன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், செல்வராஜ், கிருபாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்