ரெயிலில் அடிபட்ட நிலையில் தச்சுத்தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை

திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-10 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ரெயில் நிலைய பகுதி வழியாக ரெயில் பணியாளர் ஒருவர் நேற்று காலை அவருக்கு ஒதுக்கப்பட்ட பணி நேரத்தில் தண்டவாளத்தை கண்காணித்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது காந்திநகர் 4-வது தெரு பகுதியில் உள்ள தண்டவாளம் ஓரம் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததை அவர் பார்த்தார். இது குறித்து திருவண்ணாமலை ரெயில்வே அதிகாரிக்கு அவர் தெரிவித்தார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அதற்குள் அந்த பகுதிக்கு பொதுமக்களும் திரண்டு வந்தனர். இந்த நிலையில் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த நபர் திருவண்ணாமலை வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முரளிதரன் (வயது 28) என்பதும் தச்சுத்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “முரளிதரன் இன்று (நேற்று) காலை அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு இறந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. எனினும் அவரது காது, வாய் பகுதியில் காயங்கள் உள்ளன. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் முழுமையாக கூற முடியும்” என்றனர். 

மேலும் செய்திகள்