புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் நிதி வரும் - கவர்னர் கிரண்பெடி தகவல்

அண்மையில் புதுச்சேரி வந்த பிரதமரிடம், மாநிலத்தின் நிதி பற்றாக்குறை குறித்து பேசியுள்ளேன். எனவே மத்திய அரசிடமிருந்து விரைவில் புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி வரும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.;

Update: 2018-03-10 23:00 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நேற்று உலக மகளிர்தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கி படிப்பில் சாதனை படைத்த மாணவிகள், மாவட்டத்தில் சிறந்த அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

பெண்கள் அரசு வேலையை மட்டும் நம்பியில்லாமல், சுயதொழிலை செய்ய முன்வரவேண்டும். சுயதொழில்தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதேபோல், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மாநில வளர்ச்சிக்காக அயராது பாடுபடவேண்டும். அவரவர் கடமைகளை சிறப்பாக செய்யவேண்டும்.

இந்தியாவில் சிறந்த மாநிலமாக புதுச்சேரியை மாற்றிட அனைவரும் பாடுபடவேண்டும். பணம் உள்ளவர்கள் ஏழைகள் என்று கூறி அரசின் உதவிகளை பெறக்கூடாது. உண்மையான ஏழைகளுக்குதான் அரசின் உதவிகள் சென்று சேரவேண்டும். இதில் அரசுத்துறை அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

சமுதாயத்தில் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. நம்மிடம் என்ன உள்ளதோ அதைகொண்டு தைரியத்துடன் முன்னேறவேண்டும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் பெண்கள் தனி அக்கறைகாட்டவேண்டும். பெண்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது, பலருக்கு வேலை கொடுப்பவர்களாக உயரவேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் நிதி பற்றாக்குறை உள்ளது. அண்மையில் புதுச்சேரி வந்த பிரதமர் மோடியிடம், மாநிலத்தின் நிதி பற்றாக்குறை குறித்து பேசியுள்ளேன். எனவே மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கான நிதி விரைவில் வரும். நானும் இனி ஒவ்வொரு நொடியும் புதுச்சேரி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்