கம்பத்தில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

கம்பத்தில் பழைய இரும்பு கடையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.;

Update: 2018-03-10 21:30 GMT
கம்பம்,

கம்பம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாசர். இவர் கம்பம்மெட்டு ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் பழைய பேப்பர், வாகனங்களுக்கு பயன்படுத்தும் என்ஜின் ஆயில் வியாபாரமும் செய்து வருகிறார். இவருடைய கடையில் பழைய பேப்பர் மற்றும் எண்ணெய் அதிக அளவில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென்று கடையில் தீப்பிடித்து கரும்புகை கிளம்பியது. உடனே இதுகுறித்து கம்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி அழகர்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் கடையில் இருந்த ஆயில் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. பின்னர் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் பாலசண்முகம், கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்