மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் பயன்பெற பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உத்தரவு

மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் பயன்பெற பெண்களுக்கு விரைவாக ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2018-03-10 21:45 GMT
சிவகாசி,

 மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்க 18–ம் ஆண்டு தொடக்க விழா சிவகாசியில் நடைபெற்றது. சங்க தலைவர் சண்முகையா தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமணகுமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:–

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது தமிழகத்தில் சேலம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக 80 சதவீத பஸ்களை இயக்கியது விருதுநகர் மாவட்டம் தான். அதற்கு தனியார் பஸ் மற்றும மினி பஸ் உரிமையாளர்கள் பெரிதும் உதவி செய்தீர்கள். மக்களுக்கு கஷ்டம் தராமல் பார்த்துக்கொண்டீர்கள்..உங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிஅதற்கு நல்ல தீர்வு காணப்படும்.

ஜெயலலிதா அறிவித்த மானிய விலையில் உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கம் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதற்கு ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை விரைந்து நடத்தி தகுதியானவர்களுக்கு ஓட்டுனர் உரிமங்களை விரைந்து வழங்க வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் ஏழை, எளிய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் கிடைக்கும். அவர்கள் அதை வைத்துக்கொண்டு ஒரு ஸ்கூட்டர் வாங்கி பயன்படுத்துவார்கள்.

பெரும்பாலான மினிபஸ்கள் நருக்குள் வரும் போது அதிக வேகமாக வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறைந்த வேகத்தில் மினி பஸ்களை இயங்க தங்களது டிரைவர்களுக்கு மினி பஸ் உரிமையாளர்கள் உத்தரவிட வேண்டும். டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விருதுநகர் ராதாகிருஷ்ணன் எம்.பி., ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் பாஸ்கர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சந்திரசேகரன் (விருதுநகர்), நடராஜன் (சிவகாசி), ராமச்சந்திரன் (ஸ்ரீவில்லிபுத்தூர்), அ.தி.மு.க. சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், பிலிப்வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சம்மேளன நிர்வாக உறுப்பினர் முகமதுஅப்துல் காதர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்