‘கந்துவட்டி கொடுமை தாங்க முடியவில்லை, எங்களை கொலை செய்துவிடுங்கள்’ போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மனு

ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்பவரின் மனைவி பானுப்பிரியா

Update: 2018-03-10 21:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்பவரின் மனைவி பானுப்பிரியா. இவர் தனது கணவர் தனசேகரன் மற்றும் பச்சிளங்குழந்தை ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– எனது கணவர் பஸ் நிலையம் பகுதியில் மதுக்கடை பார் நடத்தி வந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி மதுக்கடை மூடப்பட்டது. இதன்காரணமாக எனது கணவர் சொந்த தொழில் செய்வதற்காக ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியில் ஒருவரிடம் வட்டிக்கு ரூ.18 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையில் ரூ.13 லட்சம் வரை திருப்பி கொடுத்துவிட்ட நிலையில் தற்போது அது வட்டியாக கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும், வட்டியும், அசலும் சேர்ந்து ரூ.36 லட்சம் தர வேண்டும் என்று கூறி துன்புறுத்தி வருகிறார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் மூலம் மிரட்டி வருகிறார். கந்து வட்டி கொடுமையில் சிக்கி சித்ரவதை அடைந்து வரும் எங்களுக்கு யாரும் உதவ மறுக்கின்றனர். எனவே, எங்களை குடும்பத்துடன் கொலை செய்து இந்த கொடுமையில் இருந்து விடுதலை அளியுங்கள். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்