திருப்பாச்சேத்தி அருகே கண்மாயில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

திருப்பாச்சேத்தி அருகே கண்மாயில் மூழ்கி 8–ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்துபோயினர்.

Update: 2018-03-10 21:15 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் அஜய்(வயது 13). இவன் அருகே கண்ணாயிருப்பு கிராமத்தில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் படமாத்தூரை சேர்ந்த சக்திவேல் மகன் சூர்யா(13) என்பவனும் படித்து வந்தான். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு சென்ற அஜய் மற்றும் சூர்யா, பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு ஒன்றாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் மேலும் 3 மாணவர்கள் சென்றனர். செல்லும் வழியில் பி.வேலாங்குளம் கண்மாயில் தண்ணீர் தேங்கிக்கிடப்பதை பார்த்த மாணவர்கள் அதில் குளிக்கச் சென்றுள்ளனர்,

கண்மாயில் மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது அஜய்யும், சூர்யாவும் தண்ணீரில் மூழ்கினர். கண்மாய் சகதியில் அவர்களது கால்கள் சிக்கியதால் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதனை பார்த்த சக மாணவர்கள் அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் 2 மாணவர்களும் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்துபோயினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாச்சேத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்