2-வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடக்கிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது தவணையாக இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடக்கிறது.

Update: 2018-03-10 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது தவணையாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடக்கிறது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவ மனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உட்பட 1,362 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனைமுறை சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

நடமாடும் குழுக்கள்

இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வயல்களில் குடியிருப்போர், சாலையோரங்களில் குடியிருப்பவர்கள், செங்கல் சூளை, கல் குவாரிகள், பஸ் நிலையங்கள், திருவிழா கூட்டங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த முகாம்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுக்கு தவறாது போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்