120 அடி உயர தேர் சாய்ந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் 120 அடி உயரம் கொண்ட தேர் நேற்று சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர்.

Update: 2018-03-10 23:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் ஆனேக்கல் தாலுகா உள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்டது உஸ்கூர் கிராமம். இக்கிராமத்தில் பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் உஸ்கூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தேர்களில் சாமிகள் அலங்கரித்து வரப்படும். வயல்வெளிகள், ரெயில்வே தண்டவாள பாதைகள் வழியாக இந்த தேர் கொண்டு வரப்படுவது வழக்கம். இதற்காக தண்டவாளத்தில் மண் கொட்டி தேர் செல்ல பாதை அமைப்பார்கள். மாடுகள் இந்த தேரை இழுத்து வர, பக்தர்கள் முன்னே செல்வார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி மத்தூரம்மாவிற்கு சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜைகள் நடந்தன. நேற்று தேர் திருவிழா நடந்தது. இதற்காக நாராயணகட்டா என்ற கிராமத்தில் இருந்து 120 அடி உயரம் கொண்ட தேரில் சாமியை வைத்தனர். பின்னர் மாடுகளை பூட்டி தேரை இழுத்து வர செய்தனர். பக்தர்கள் தேரின் முன்புறமும், பக்கவாட்டிலும் நடந்து வந்தனர்.

நேற்று மாலை அந்த தேர் முட்டநல்லூரு என்னும் இடம் அருகில் வந்த போது எதிர்பாராதவிதமாக சாய்ந்தது. தேர் சாய்வதை கண்ட பக்தர்கள் அங்கிருந்து அலறி அடித்தபடி ஓடினார்கள். தேர் நேராக சாயாமல் பக்கவாட்டில் விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பங்கள் மீது சாய்ந்து விவசாய நிலத்தில் விழுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்த ஆனேக்கல், அத்திப்பள்ளி, சர்ஜாபுரம் பகுதிகளில் இருந்து போலீசார் அங்கு விரைந்தனர். அதே போல தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளை கவனித்தனர். இது குறித்து உஸ்கூர் கிராம மக்கள் கூறியதாவது:- நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊரில் மத்தூரம்மா கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. முதல் முறையாக இந்த ஆண்டு 120 அடி உயர தேர் சாய்ந்து விட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் ஓசூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்