விசுவக்குடி கிராமத்தை ஊராட்சியாக தரம் உயர்த்தக்கோரி எம்.எல்.ஏ.விடம் இளைஞர்கள் மனு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நேற்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2018-03-10 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நேற்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், வேப்பந்தட்டை ஒன்றியம் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அரசலூர், அன்னமங்கலம், பூம்புகார் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். பெரிய ஊராட்சியாக இருப்பதால் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் போன்ற கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலைவசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவே பின்தங்கியுள்ள இப்பகுதியை ஊராட்சியாக தரம் உயர்த்தினால் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி ஏற்படும். மேலும் விசுவக்குடியை முதன்மையாக கொண்டு அருகில் உள்ள முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் கிராமங்களையும் இணைத்து புதிய ஊராட்சி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதிகளில் வரும் அரசு பஸ் சில கிராமங்களுக்கு வராமல் சென்று விடுகின்றன. இதனால் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் போகிறது. எனவே இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட எம்.எல்.ஏ. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். 

மேலும் செய்திகள்