பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 3 ஆயிரம் படகுகள் கரையில் நிறுத்தம்

வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2018-03-10 21:00 GMT
தூத்துக்குடி,

வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 3 ஆயிரம் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.

எச்சரிக்கை


வங்கக்கடலில் தென் தமிழக பகுதியில் புதிய புயல் காரணமாக மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவுரையின்பேரில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரசுவதி தலைமையில் அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு தொடர்பு கொண்டு புயல் எச்சரிக்கை குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். ஏற்கனவே கடலுக்கு சென்ற படகுகளையும் விரைவில் கரைக்கு திரும்புவதற்கு அறிவுறுத்தி உள்ளனர்.

3 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

இதன் காரணமாக நேற்று அதிகாலையில் கடலுக்கு செல்ல வேண்டிய மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 3 ஆயிரம் நாட்டுப்படகுகள் நேற்று கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற படகுகளும் கரைக்கு திரும்ப தொடங்கி உள்ளன.

மேலும் நேற்று தூத்துக்குடி கடல் பகுதியில் மிதமான காற்று வீசியது. அதிகபட்சமாக மணிக்கு 46 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. வெயிலின் தாக்கமும் சற்று அதிகமாக இருந்தது.

மேலும் செய்திகள்