‘3’ பேர் மட்டும் பேசும் மொழி!

அழிவின் விளிம்பில் உள்ள ஒரு மொழியை மூன்று பேர் மட்டுமே பேசி வருகின்றனர்.

Update: 2018-03-10 08:02 GMT
பாகிஸ்தானில் அழிவின் விளிம்பில் உள்ள ஒரு மொழியை மூன்று பேர் மட்டுமே பேசி வருகின்றனர்.

அந்த மொழியின் பெயர், பதேசி. பனி மலைகள் நிறைந்த வடக்கு பாகிஸ்தானில் ஒரு காலத்தில் இந்த மொழி பரவலாக பேசப்பட்டது. ஆனால் தற்போது இம்மொழி, பேச்சுவழக்கில் இருந்தே மறைந்துபோகும் நிலையில் உள்ளது.

உலக மொழிகளைப் பட்டியல் இட்டுள்ள எத்னோலாக் என்ற அமைப்பு, கடந்த மூன்று தலைமுறைகளாக பதேசி மொழியை யாரும் பயன்படுத்தவில்லை என்று கூறியது.

ஆனால், பிஷிகிராம் பள்ளத்தாக்கு பகுதியில் 3 பேர் மட்டும் இம்மொழியைப் பேசுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அந்த மூன்று பேரில் ஒருவரான ரஹிம் குல், “ஒரு தலை முறைக்கு முன்பு, பதேசி மொழி எங்கள் கிராமம் முழுவதும் பேசப்பட்டது. ஆனால் அது தற்போது பழைய கதை ஆகிவிட்டது” என்கிறார்.

பதேசி மொழியின் அழிவுக்கு, இம்மக்களின் திருமண உறவுதான் காரணம் என்பது ஆச்சரியமான விஷயம்.

அதுபற்றி ரஹிம் குல், “நாங்கள் அருகில் உள்ள கிராமங் களில் இருந்து பெண் எடுத்தோம். அவர்கள் ‘டோர்வாலி’ என்ற மொழி பேசுபவர்கள். மெல்ல எங்கள் குழந்தைகளும் அவர் களின் தாய்மொழியான டோர்வாலியை பேசத் தொடங்கினார்கள். இப்படித்தான் எங்கள் பதேசி மொழி அழிந்தது” என்கிறார் வருத்தத்துடன்.

தற்போது தங்களின் பிள்ளைகளும், அவர்களின் குழந்தைகளும் டோர்வாலி மொழியிலேயே பேசிக்கொள்வதாகவும், அந்நிலையில், நாங்கள் யாருடன் தமது பதேசி மொழியில் பேச முடியும் என்றும் குல் கேட்கிறார்.

பிஷிகிராம் பகுதியில் டோர்வாலி மொழியின் ஆதிக்கமே நிறைந்திருக்கிறது. ஆனால் தற்போது, அந்த மொழிக்கும் ‘பஷ்தோ’ மொழியால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

அந்தப் பகுதியில் எந்த வேலைவாய்ப்புகளும் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஸ்வாட் மாவட்டத்தைச் சார்ந்திருக் கிறார்கள். அங்கு அதிகம் பயன்படுத்தப்படுவது பஷ்தோ மொழிதான். எனவே அவர்கள் தங்கள் தாய்மொழியை மறந்து பஷ்தோவை அதிகம் பயன் படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது இப்படி என்றால், பதேசி மொழியைப் பேசி வரும் கடைசி 3 நபர்களுக்கும், அம்மொழியை வேறு யாருடன் பேசுவது எனத் தெரியவில்லை. இவர் களும் இம்மொழியை மறக் கும் நிலை ஏற்பட்டுள்ளதுதான் பரிதாபம்.

இம் மூவரும் பேசிக்கொள்ளும்போதும், இவர்கள் ஓரிரு வார்த்தைகளை மறந்து விடுகிறார்களாம். அடுத்தவர் நினைவூட்டிய பின்பே அந்த வார்த்தைகள் இவர்கள் நினைவுக்கு வருகிறதாம்.

ரஹிம் குல்லின் ஒரே மகனுக்கு 5 குழந்தைகள் இருக் கிறார்கள். அந்தக் குழந்தைகள் அனைவரும் டோர்வாலி மொழியில்தான் பேசிக்கொள்கிறார்கள்.

ரஹிம் குல்லின் மகன், “என் அம்மா டோர்வாலி மொழிதான் பேசுவார். எங்கப்பாவுடனும் அவர் அந்த மொழியில்தான் உரையாடுவார். அவர்கள் எப்போதும் பதேசி மொழியில் பேசிக்கொண்டதில்லை. அதனால், நானும் சிறுவயது முதலே பதேசி மொழியை பேசவில்லை. அந்த மொழியில் எனக்குச் சில வார்த்தைகள் மட்டுமே தெரியும். என் குழந்தைகளும் டோர்வாலியே பேசுகிறார்கள்” என்கிறார்.

அப்பாவின் மொழியைப் பேசமுடியவில்லை என்பதில் இவருக்கு வருத்தம்தானாம். ஆனாலும், “இனி என்ன செய்வது? இப்போது எனக்கு 32 வயது ஆகிறது. இனி அந்த மொழியை நான் எப்படிக் கற்றுக்கொள்ள முடியும்? ஆனால், என் தந்தையுடன் இந்த மொழியும் மறைந்துபோகும் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது” என்கிறார்.

உலகில் பல பகுதிகளைப் போல பாகிஸ்தானிலும் பல பழமையான மொழிகள் மறைந்து வருகின்றன. அந்நாட்டில் அழிந்துவரும் மொழிகளைக் காக்கவும், அவற்றைப் பரவலாக்கவும் ‘போரம் பார் லாங்வேஜ்’ என்ற அரசு சாரா அமைப்பு இயங்கிவருகிறது. அதனுடன் இணைந்து, சாகர் ஜமான் என்ற மொழியியல் நிபுணர் செயல்பட்டு வருகிறார்.

அவர் கூறுகையில், “நான் பிஷிகிராம் பள்ளதாக்குக்கு மூன்று முறை பயணம் செய்திருக்கிறேன். அப்போது அம்மக்கள் என் முன்னால் பதேசி மொழியைப் பேசுவதற்குத் தயக்கம் காட்டினார்கள்” என்கிறார்.

அவரே தொடர்ந்து, “நானும் பிற மொழியியல் நிபுணர்களும் இந்த மொழியின் வார்த்தைகளை ஆய்வு செய்தபோது, இது இந்தோ- ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கண்டுபிடித்தோம்” என்கிறார்.

தாய்மொழியைப் புறக் கணிக்கும் சமூகங்களுக்கு, இந்த விஷயம் ஓர் எச்சரிக்கை விளக்கு! 

மேலும் செய்திகள்