10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-03-09 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி, நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தமிழ்பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசியதாவது:-

அரசு, நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தில் எழுதவும், வாசிக்கவும் திறன் பெற திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்தல் மற்றும் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து மாணவர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வருகிற ஏப்ரல் 19-ந் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தில் வாசித்தல் மற்றும் எழுதும் திறனை பெற்று பொது அறிவை வளர்க்கும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த 3 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 7 ஆயிரத்து 297 மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. எனவே, இந்த ஆண்டு தமிழ் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்