குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் அண்ணன்-தம்பிகள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஒரே நாளில் அண்ணன்-தம்பிகள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-09 23:42 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் அண்ணன்-தம்பிகள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-

திருவட்டார் போலீஸ் சரகம் வியன்னூர் முளகுவிளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருக்கு ஜோஸ் (வயது 23), சுபின்ராஜ் (22) மற்றும் யூஜின் (21) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் திருவட்டார், கன்னியாகுமரி, கொற்றிக்கோடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடி-தடி வழக்குகள், கொலை முயற்சி, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி 3 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான அனுமதிகோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார். அதற்கு கலெக்டர் அனுமதி வழங்கினார்.

ஜோஸ் உள்ளிட்ட 3 பேரும் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். அதைத்தொடர்ந்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை திருவட்டார் போலீசார், சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து அண்ணன்-தம்பிகள் 3 பேரையும் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதே போல் பூவன்கோடு பகுதியை சேர்ந்த சாம்நிஜி (27) என்பவரையும் திருவட்டார் போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இவர் மீதும் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

மேலும் மணவாளக்குறிச்சியை சேர்ந்த தாடிசேகர் (35) என்பவர் மீதும் கொலை முயற்சி வழக்கு இருக்கிறது. அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே அனுமதியுடன் சேகரை மணவாளக்குறிச்சி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சாம்நிஜி மற்றும் தாடிசேகர் ஆகியோரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஸ்ரீநாத் பொறுப்பேற்றது முதல், குற்ற சம்பவங்களை குறைக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் ஒன்று. கடந்த பிப்ரவரி மாதம் வரை குண்டர் சட்டத்தின் கீழ் 12 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் கைது செய்யப்பட்டதால் கைது எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்