காவிரி பிரச்சினை தொடர்பாக 4 மாநில அதிகாரிகளின் கூட்டம் நடத்தியது கண்துடைப்பு நடவடிக்கை ராஜபாளையத்தில் முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 23–வது மாவட்ட மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

Update: 2018-03-09 22:00 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 23–வது மாவட்ட மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நகர செயலாளர் ரவி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். முன்னதாக பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து தொடங்கிய பேரணி பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ரவுண்டானா வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு சென்றது. முன்னதாக நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:–

தமிழகத்துக்கான காவிரி நீரின் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விசாயத்திற்கு மட்டுமல்ல. ஏறத்தாழ 20 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 4 மாநில அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியுள்ளது வெறும் கண்துடைப்பு. இக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. பெண்கள் கணவருடன் நடந்து செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரி வாசல்களில் மாணவிகள் குத்தி கொல்லப்படுகிறார்கள். இதற்கெல்லாம் மேலாக காவல் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதையே முழு நேர வேலையாக செய்து வருகின்றனர். ஒரு சில நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தீய சக்திகள் காவல் துறையில் புகுந்து விட்டன. திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பெண் கருக்கலைந்து பலியாகி உள்ளார். அவர் 2 கொலைகளை செய்துள்ளார். காவல்துறையின் இத்தகைய போக்கினை இந்திய கம்யூனிஸ்டு வன்மையாக கண்டிக்கிறது. உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி இச்சம்பவத்தின் போது பெண் கர்ப்பிணியாக இருந்தாரா என்பது காவல் துறையினருக்கு தெரியுமா என்று கேள்வி கேட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இத்தகைய கேள்விகளை கேட்கலாமா என அவர் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்