குன்னூர் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரேலியா அணையின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும், மக்கள் மன்ற அமைப்பினர் கோரிக்கை

குன்னூர் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரேலியா அணையின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்று குன்னூர் மக்கள் மன்ற அமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-03-09 22:30 GMT
குன்னூர்,

குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் தற்போது 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் கோடை காலத்தில் குடிநீர் வினியோகம் எவ்வாறு இருக்கும்? என்ற கலக்கம் தற்போது மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ரேலியா அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் கோடை காலத்தை சமாளிக்க நீரை சேமித்து வைத்து உள்ளதாக நகராட்சி நிர்வாகம் கூறுகிறது. இந்த நிலையில் குன்னூர் மக்கள் மன்ற அமைப்பின் தலைவர் ஜெபரத்தினம், துணைத்தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ராஜேஸ்குமார் ஜேம்ஸ், பொருளாளர் ராகேஸ் ஜெயின், நிர்வாகிகள் செங்கப்பா, சுனில் காயல், சீதாராம் பாரதி ஆகியோர் கொண்ட குழுவினர் குன்னூரின் குடிநீர் ஆதாரங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

குன்னூர் நகரின் குடிநீர் ஆதாரங்களான ரேலியா அணை, கரன்சி நீர் தேக்கம், ஜிம்கானா நீர் தேக்கம் போன்றவற்றை நேரில் சென்று பார்த்தோம். இங்கிருந்து நகர் பகுதிகளுக்கு வினியோகிக்கும் குழாய்களில் பெரும்பாலான இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வினியோகம் சீரான முறையில் இல்லை. ரேலியா அணை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். தற்போது குன்னூர் நகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இதன் கொள்ளளவை அதிகரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே ரேலியா அணையின் ஸ்திர தன்மையை ஆய்வு செய்து அணையின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். குடிநீர் மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்க வசதியாக கிரேஸ் ஹில்லில் உள்ள தண்ணீர் தேக்கதொட்டியை போன்று மற்றொரு குடிநீர் தேக்க தொட்டியை அமைக்கவேண்டும்.

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர், நகராட்சி கமிஷனரிடம் எடுத்து கூறப்பட்டது. மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில் அமைப்பின் நிர்வாகிகள் நகராட்சி மண்டல இயக்குனர், மண்டல செயற்பொறியாளர் ஆகியோரை சந்தித்தோம். அவர்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிதி ஒதுக்கவும், ரேலியா அணை குறித்து ஆராய ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவரை ஆலோசகராக நியமிக்கவும் முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்