துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல், சென்னையை சேர்ந்தவர் கைது

மதுரை விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-03-09 22:30 GMT
மதுரை,

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, சென்னையை சேர்ந்த அகமது ஜலால் (வயது 38) என்பவர் அங்கு வந்தார். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் கொண்டு வந்த உடமைகளை தனித்தனியாக சோதனை செய்தனர். ஆனால் அதில் தங்கம் ஏதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் மீது சந்தேகம் இருந்ததால், அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் அவர் அணிந்திருந்த மருத்துவ பெல்ட்டில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் அணிந்திருந்த மருத்துவ பெல்ட்டை சோதனை செய்தபோது அதில் களிமண் போன்ற ஒரு பொருள் இருந்தது. அதனை தீயில் வைத்து எரித்தபோது அதில் இருந்து தங்கத் துகள்கள் வெளியே வரத் தொடங்கின. இதனை தொடர்ந்து அதிகாரிகள், அதில் இருந்த ரூ.11 லட்சத்து 84 ஆயிரத்து மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அகமது ஜலாலையும் கைது செய்தனர்.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அகமது ஜலாலின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. அதனால் தான் அவரை சோதனை செய்தோம். ஆனால் முதலில், அவரிடம் இருந்து தங்கம் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும் அவர் மீது நம்பிக்கை ஏற்படாததை தொடர்ந்து, தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினோம். அப்போது நோயாளிகள் அணிந்து வரும் மருத்துவ பெல்ட்டில் தங்கம் கடந்தி வந்ததாக அவர் கூறினார். அதன்பின்னர் அவர் அணிந்திருந்த மருத்துவ பெல்ட்டை பார்த்தபோது, அதில் சுமார் 722 கிராம் எடை கொண்ட களிமண் போன்ற பொருள் இருந்தது. அதனை தீயில் வைத்து எரித்து அதில் இருந்த 386.7 கிராம் தங்கத்தை கைப்பற்றி இருக்கிறோம். இதுவரை இதுபோன்ற நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டதில்லை‘ என்றனர். 

மேலும் செய்திகள்