மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

Update: 2018-03-09 22:30 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் வழங்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்களை கூடுதலாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

தேரடி தெருவில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் துர்நாற்றம் வீசுவதை தடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்திடம் பல மாதங்களுக்கு முன்பு மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை.

இதை தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் துளசி தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், வட்ட செயலாளர் வாசுதேவன், மாவட்ட குழு உறுப்பினர் மாசிலாமணி, வட்டகுழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, நடராஜன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து கீழே அமர்ந்து பொதுமக்கள் உள்ளே செல்லாதபடியும் அதிகாரிகள் வேலை செய்யமுடியாதபடி தடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவாத்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்