ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நிபந்தனை ஜாமீன்: துணைவேந்தர், பேராசிரியர் சிறையில் இருந்து வெளியே வந்தனர்

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று வெளியே வந்தனர்.

Update: 2018-03-09 22:45 GMT
கோவை,

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் கணபதி (வயது 67). இவர் பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணிநிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த மாதம் 3-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் துணைவேந்தருக்கு உதவியாக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதை தொடர்ந்து அவர் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் ஜாமீன் கேட்டு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு முறை மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.

இதற்கிடையில் துணைவேந்தர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நேற்று முன்தினம் துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவர் தினமும் காலை மற்றும் மாலையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் கூறப்பட்டது.

அந்த ஜாமீன் உத்தரவின் நகல் கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நகல் பரிசீலிக்கப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவுபடி துணைவேந்தரின் பாஸ்போர்ட் கோவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் துணைவேந்தருடன் கைதான பேராசிரியர் தர்மராஜ் கோவை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கடந்த 6-ந் தேதி 3-வது முறையாக மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று நீதிபதி ஜான்மினோ முன்பு விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து பேராசிரியர் தர்மராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி ஜான்மினோ நேற்று மதியம் உத்தரவிட்டார்.

அதன்படி பேராசிரியர் தர்மராஜ் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நேற்று மாலை கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது சிறை வாசலில், துணைவேந்தர் கணபதியிடம் பேட்டி காண நிருபர்கள் முற்பட்டபோது, ‘கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார். அதன்பின்னர் துணைவேந்தரும், பேராசிரியரும் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்