ஆற்றங்கரை–திருவனந்தபுரம் பஸ் வழித்தடத்தை திசையன்விளை வரை நீட்டிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

ஆற்றங்கரை–திருவன்தபுரம் பஸ் வழித்தடத்தை திசையன்விளை வரை நீட்டிக்க தமிழக மற்றும் கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2018-03-08 20:30 GMT
திசையன்விளை,

ஆற்றங்கரை–திருவன்தபுரம் பஸ் வழித்தடத்தை திசையன்விளை வரை நீட்டிக்க தமிழக மற்றும் கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

இச்சங்கத்தின் தலைவர் சாலமோன் ஜவகர், செயலாளர் பிரைட், பொருளாளர் வசந்தன் ஆகியோர் தமிழ்நாடு முதல்–அமைச்சர், கேரள மாநில முதல்–அமைச்சர், இருமாநில போக்குவரத்து அமைச்சர்கள், ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பத்துரை ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:–

புதிய வழித்தடம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும், கேரள மாநில அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து தற்போது புதிய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதில், ஆற்றங்கரை–திருவனந்தபுரம் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளது. இது மகிழ்ச்சிக்குரியது. அதே சமயம், இந்த வழித்தடத்தை ஆற்றங்கரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திசையன்விளை வரை நீட்டித்து தர வேண்டும்.

திசையன்விளை சுமார் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை நகர பஞ்சாயத்தாகும். இந்நகரை சுற்றி 30–க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தற்போது திசையன்விளை தனித்தாலுகாவாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் மருத்துவம், விவசாய விளை பொருட்கள் விற்பனைக்காக கேரள பகுதிக்கு சென்று வருகின்றனர். கேரள மக்கள் ஆன்மீக பயணமாக உவரி, அணைக்கரை, சித்தூர், விஜயநாராயணம் பகுதியிலுள்ள மும்மதங்களின் தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

திசையன்விளைக்கு நீட்டிக்க வேண்டும்


இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு இணைப்பு பஸ் வசதி உள்ளது. எனவே, திருவனந்தபுரம் பகுதிக்கு சென்று வர, தாங்கள் புதிதாக இயக்கும் ஆற்றங்கரை–திருவனந்தபுரம் வழித்தடத்தை திசையன்விளை வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்