பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் சித்தராமையா பேட்டி

யோகிஆதித்யநாத்தின் பேச்சு கன்னடர்களின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட களங்கம் என்றும், பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் சித்தராமையா கூறினார்.

Update: 2018-03-07 23:17 GMT

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று கிருஷ்ணா இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

நான் கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். ஆனால் நான் தரம் தாழ்ந்து பேசியது இல்லை. ஆனால் பா.ஜனதாவினர் அரசியல் நோக்கத்துடன் என்னை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார்கள். இது அவர்களின் கலாசாரத்தை எடுத்துக் காட்டுகிறது. நான் அவ்வாறு பேசமாட்டேன். அவர்களுக்கு பண்பாடு, மனிதத்துவம் எதுவும் இல்லை.

உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் என்னை தவறாக பேசி இருக்கிறார். இது கன்னடர்களின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட களங்கம். கன்னடர்கள் இதுபோன்ற கருத்துகளை சகித்துக்கொள்ள மாட்டார்கள். தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பண்பாடு இல்லாமல் பேசும் பா.ஜனதா தலைவர்களின் கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.

உடுப்பிக்கு வந்தால் என்னை அடிப்பதாக ஷோபா எம்.பி. கூறுகிறார். ஒரு அரசியல் தலைவராக இருக்கும் அவர் இவ்வாறு பேசுவது சரியா?. இத்தகைய கருத்துகள் மூலம் அவர் வன்முறையை தூண்டிவிடுகிறார். அசோக் கேனி எங்கள் கட்சியில் சேர்ந்ததால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவருக்கு டிக்கெட் கொடுப்பதாக நாங்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை. எந்த நிபந்தனையும் விதிக்காமல் அவர் கட்சியில் சேர்ந்துள்ளார்.

அசோக் கேனிக்கு டிக்கெட் கொடுப்பது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். பெங்களூரு மாநகராட்சியில் ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜனதா தளம்(எஸ்) கட்சி கூறி இருப்பது பற்றி நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். ஒப்பந்தத்தின்படி காங்கிரசுக்கு மேயர் பதவியும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு துணை மேயர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

கல்லடக்க பிரபாகர் பட் நடத்தும் பள்ளியில் இருந்து மதிய உணவு திட்டம் சட்டப்படி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இத்தகைய சிறிய வி‌ஷயத்தை வைத்துக்கொண்டு பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். எங்கள் அரசுக்கு எதிராக குறை கூற அவர்களிடம் எந்த வி‌ஷயமும் இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்