பா.ஜனதா தலைவர்கள் கர்நாடகத்தின் கரும் புள்ளிகள்

பா.ஜனதா தலைவர்கள் கர்நாடகத்தின் கரும்புள்ளிகள், ஆட்சியை பிடிக்க அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.

Update: 2018-03-07 23:11 GMT

பெங்களூரு,

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தின் சட்டம்–ஒழுங்கு குறித்து பா.ஜனதா பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால் புள்ளி விவரங்கள் பொய் கூறுவது இல்லை. கர்நாடகத்தில் 2008–2013–ம் ஆண்டு வரை நடந்த பா.ஜனதா ஆட்சியை ஒப்பிடுகையில் காங்கிரஸ் ஆட்சியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

பா.ஜனதா ஆட்சியில் 8,885 கொலைகள், 9,648 கொள்ளைகள், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 342 தாக்குதல் சம்பவங்கள் நடந்து உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் 7,759 கொலைகள், 5,542 கொள்ளைகள், 93 ஆயிரத்து 886 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கர்நாடகத்தில் இந்து அமைப்பை சேர்ந்த 23 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதில் 11 கொலைகள் மட்டுமே அவர்கள் கூறும் காரணங்களில் சேரும்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதல்–மந்திரியாக இருந்தபோது தொடர்ந்து கொலைகள் நடந்தன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நரேந்திர மோடி ஆட்சியில் தான் நடந்தது. இந்த சம்பவங்கள் பா.ஜனதாவினரின் நினைவுக்கு வருவது இல்லை. இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மூலம் 11 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். இதுபற்றி எதற்காக பா.ஜனதாவினர் வாய் திறப்பது இல்லை.

பெங்களூருவில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக ரெயில் ஏறி பெங்களூருவில் இருந்து தங்கள் மாநிலத்துக்கு திரும்பியது அவர்களுக்கு நியாபகம் இல்லையா?. பா.ஜனதாவினர் அரசியலில் நீடிப்பதற்கும், ஆட்சியை பிடிப்பதற்கும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். குற்ற சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். பா.ஜனதாவின் முன்னாள் போலீஸ் மந்திரி அசோக் தயாரா?. இல்லையென்றால் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடமும் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, எம்.பி.க்களான ஷோபா, நளின் குமார் கட்டீல், எம்.எல்.ஏ. சி.டி.ரவி உள்பட பல்வேறு பா.ஜனதா தலைவர்கள் கர்நாடகத்தின் கரும்புள்ளிகள். இவர்கள் அரசியல் லாபத்துக்காக யாரை வேண்டுமானாலும் குற்றம்சாட்டுவதுடன், பொய்களும் கூறுவார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அமைதியாக உள்ள கர்நாடக மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு குறித்து அறிவுரை வழங்க சட்டம்–ஒழுங்கு சரியில்லாத மாநிலங்களின் ஒன்றின் முதல்–மந்திரியான யோகி ஆதித்யநாத்தை பா.ஜனதா அழைத்து வருகிறது. யோகி ஆதித்யநாத்தை விட திறமையான தலைவர்கள் கர்நாடக பா.ஜனதாவில் இல்லையா?. இது கர்நாடக பா.ஜனதா தலைவர்களின் திறமையின்மையை காட்டுகிறது.

கவுரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். போலீஸ் காவலில் உள்ள நவீன் குமாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கும், கவுரி லங்கேஷ் கொலைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது விரைவில் தெரியவரும். அதைத்தொடர்ந்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்