பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவு வாபஸ் இல்லை

பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவு வாபஸ் இல்லை எனவும், அரசுக்கு எதிராக குரல்கொடுப்போம் எனவும் தேவேகவுடா கூறினார்.

Update: 2018-03-07 22:59 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

கர்நாடக அரசு லோக் அயுக்தா அமைப்பின் செயல்பாட்டை முடித்து வைத்துள்ளது. தற்போது லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி மீது ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இவை அனைத்தையும் பார்க்கும்போது நாம் எல்லாம் எங்கு இருக்கிறோம் என்ற சந்தேகம் எழுகிறது.

கர்நாடகம் எந்த வகையிலான மாநிலம் என்பது புரியவில்லை. லோக் அயுக்தா நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மற்றவர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்?. இது குண்டர்கள் வாழும் மாநிலமா?. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

நைஸ் நிறுவன முறைகேடு குறித்து சட்டசபை கூட்டுகுழு விசாரித்தது. முறைகேடு நடந்ததாக கூறியதோடு, சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தது. ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், அசோக் கேனி காங்கிரசில் சேர்ந்துள்ளார். இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவருக்கு துணை முதல்–மந்திரி பதவி வேண்டுமானாலும் கொடுக்கலாம். நைஸ் ரோடு சுங்க கட்டண விவரங்களை கொடுக்கும்படி அரசு கேட்டபோது அதற்கு அசோக் கேனி கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார்.

இதை எதிர்க்க அரசுக்கு அட்வகேட் ஜெனரல் இல்லையா?. அசோக் கேனி செய்த முறைகேடுகளை அரசே கூறியுள்ளது. முறைகேடுகளில் அசோக் கேனிக்கும், அரசுக்கும் உள்ள தொடர்பை வெளியே கொண்டு வருவேன். சிறைக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்று முதல்–மந்திரி கூறுகிறார். இது பொய் என்று அரசு அதிகாரிகளே கூறுகிறார்கள். நைஸ் நிறுவன முறைகேடு குறித்து கவர்னரிடம் ஜனதாதளம்(எஸ்) கட்சி புகார் அளித்தது. இதுதொடர்பாக ரூ.10 கோடிக்கு என்மீது அசோக் கேனி மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வேளையில் பா.ஜனதா கட்சியும் அமைதியாக இருந்தது.

பெங்களூரு மாநகராட்சியில் ரூ.2,500 கோடி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டுகிறது. அவர்கள் மீது இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?. எனவே காங்கிரஸ், பா.ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து ஆதரவை வாபஸ் பெறப்போவதில்லை. ஆனாலும், மாநில அரசுக்கு எதிராக குரல் கொடுப்போம்.

மேல்–சபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஆனாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த முறை பி.எம்.பாரூக்குக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அடுத்த முறை ஸ்டேனிஷ் அலிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்