வங்கி கடன் மோசடி வழக்கில் புலனாய்வு அதிகாரிகள் முன் பஞ்சாப் நேஷனல் வங்கி இயக்குனர் ஆஜராகி விளக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.12 ஆயிரத்து 700 கோடி கடன் மோசடி தொடர்பாக அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர், புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Update: 2018-03-07 22:33 GMT
மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஊழியர்கள் மூலம் வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் ரூ.12 ஆயிரத்து 700 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 18 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

இந்தநிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கடன் மோசடி தொடர்பாக, மத்திய அரசின் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீவிர மோசடி புலனாய்வு பிரிவின்(எஸ்.எப்.ஐ.ஓ.) அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் சுனில் மேத்தாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்தநிலையில், மும்பை போர்ட்டில் உள்ள தீவிர மோசடி புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று காலை 10.30 மணியளவில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் சுனில் மேத்தா வந்தார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் வங்கியில் நடந்த கடன் மோசடி குறித்து விரிவாக தனது விளக்கத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

கீதாஞ்சலி குழுமத்துக்கு ரூ.5 ஆயிரத்து 280 கோடி கடன் கொடுத்து இருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர், ஆக்ஸிஸ் வங்கி நிர்வாக இயக்குனர் ஷிகா சர்மா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்