நடுக்கடலில் சரக்கு கப்பல் தீப்பிடித்தது 4 சிப்பந்திகள் மாயம்; 23 பேர் மீட்பு

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் தீப்பிடித்தது. இதில் 4 சிப்பந்திகள் மாயமானார்கள். 23 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2018-03-07 22:20 GMT
மும்பை,

சிங்கப்பூரில் இருந்து மெர்ஸ்க் ஹோனம் என்ற சரக்கு கப்பல் கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சுவிட்சர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 27 சிப்பந்திகள் இருந்தனர். அவர்களில் கப்பல் கேப்டன் உள்பட 13 பேர் இந்தியர்கள் ஆவர்.

330 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பல் நேற்றுமுன்தினம் இரவு அரபிக்கடலில் லட்சத்தீவின் அகட்டி பகுதியில் இருந்து 570 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கப்பலின் முதன்மை தளத்தில் திடீரென பயங்கர வெடி சத்தம்கேட்டது. அடுத்த சில நொடிகளில் கப்பல் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.

தீ மளமளவென கப்பலின் மேல் பகுதி வரையிலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் அதில் இருந்த சிப்பந்திகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர். உடனடியாக இந்திய கடலோர காவல்படையின் உதவி கோரப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு ‘எம்.பி.அல்ஸ் சிரியே’ என்ற கப்பல் இரவு 11.25 மணியளவில் சென்றடைந்தது.

இதையடுத்து தீப்பிடித்த கப்பலில் சிக்கியிருந்த 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 4 பேர் மாயமானார்கள். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அந்த கப்பல் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இந்தநிலையில், மும்பையில் உள்ள கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சரக்கு கப்பல் தீப்பிடித்து எரியும் பகுதி வழியாக மற்ற கப்பல்கள் வந்து விடாமல் இருப்பதற்காக சாட்டிலைட் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் அந்த பகுதியில் செல்லும் கப்பல்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தது.

இதற்கிடையே தீப்பிடித்து எரியும் கப்பலில் இருந்து மாயமான சிப்பந்திகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மேற்கு மண்டல கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே.ஆர்.நாட்டிவால் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்