பெண் தீக்குளித்து தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்

தூசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் செய்தார்.

Update: 2018-03-07 22:15 GMT
தூசி,

தூசி அருகே உள்ள அப்துல்லாபுரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). இவரது மனைவி மலர்கொடி (26). இவர்களுக்கு கவுசி (5) நரேன் (2) என 2 மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுரேஷ் தான் வாங்கும் சம்பளத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் குடித்துவிட்டு மலர்கொடியை தினமும் அடித்து வந்ததாக கூறப்படுகிறது. தகராறு ஏற்படும் போது மலர்கொடி, தூசி அருகே புன்னை புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். இதனையடுத்து நீலாவதி, மகளை சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்.

கடந்த 5-ந் தேதி மலர்கொடி வீட்டில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மலர்கொடியின் தாய் நீலாவதி தூசி போலீசில் கொடுத்துள்ள புகாரில், எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. மகள் சாவிற்கு மருமகன் சுரேஷ் தான் காரணம் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்