தோகைமலை அருகே மேலும் 2 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் சிகிச்சை

தோகைமலை அருகே மேலும் 2 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2018-03-07 23:00 GMT
தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காவல்காரன்பட்டி, புத்தூர், உப்புகாச்சிபட்டி, கார்ணாம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு மாணவிகளில் 6 பேர் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். இதனையடுத்து மாணவிகளை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவிகள் வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று மேலும் 2 மாணவிகள் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொதுத்தேர்வு பயத்தில் மாணவிகள் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் படிப்பதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அன்பழகன், காவல்காரன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை அளிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று தோகைமலை வட்டார மருத்துவ அலுவலர் பாரதி தலைமையில் மாணவ-மாணவிகளுக்கான மன நல ஆலோசனை முகாம் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட மன நல ஆலோசகர் ராஜலட்சுமி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மன நல ஆலோசனைகளை வழங்கி பேசுகையில், “எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு என்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது அனைத்து வினாக்களும் மிகவும் எளிமையாக உள்ளது. அதனால் தேர்வு பயத்தில் மாணவ-மாணவிகள் இருக்க வேண்டாம். நன்றாக நேரத்திற்கு சாப்பிட்டு, உரிய நேரத்தில் தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும். அதிக நேரம் தூங்காமல் கண் விழித்து படித்தால் தான் தேர்ச்சி பெற முடியும் என்பதை மாணவர்கள் கைவிட வேண்டும். மனதில் தைரியத்தை வளர்த்து கொண்டு பொதுத்தேர்வுக்கு படிக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்