திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கோரி, கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-03-07 22:30 GMT
கம்பம்,

கிராமப்புறங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு, தனிநபர் கழிப்பறை, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் களஆய்வு ஒரு சில வாரங்களில் நடைபெற உள்ளது. இதனால் இந்த திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து உடனடியாக விரைந்து முடிக்க ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திடீர் உத்தரவால், நெருக்கடிக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் வேண்டி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் பேயத்தேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு, தனிநபர் கழிப்பறை, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம் போன்ற பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் கேட்டு கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் உதவிப்பொறியாளர் விவேகானந்தன், வட்டச்செயலாளர் மாணிக்கம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்