பஸ்சில் வெடிகுண்டுடன் வந்த 2 பேர் கைது: எதிரிகளை பழி வாங்க எடுத்து வந்தபோது சிக்கினர்

பஸ்சில் வெடிகுண்டுடன் வந்தவர்கள் எதிரிகளை பழி வாங்க எடுத்து வந்தபோது சிக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2018-03-07 21:45 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு சாலையில் நேற்று முன்தினம் பட்டுபள்ளி கிராமத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த பஸ்சை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அந்த பஸ்சில் கத்தியுடன் பயணம் செய்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை குரோம்பேட்டையை அடுத்த ஜமீன்பல்லாவரத்தில் வசித்து வரும் கொலை வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளி கோதண்டன் (வயது 55), தேர்வழி கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (45) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் வைத்திருந்த பார்சலில் நாட்டு கையெறி வெடிகுண்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நாட்டு வெடிகுண்டையும், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டை, கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் அருகே மணல் மூட்டைகளை அடுக்கி பத்தரமாக போலீசார் வைத்தனர்.

இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட கோதண்டன் என்பவர் பிரபல ரவுடி தினக்குமார்(26) என்பவரின் தந்தை என்பது தெரியவந்தது. மேலும் கார் கடத்தல், செம்மரக்கட்டை கடத்தல், கட்டபஞ்சாயத்து மிரட்டல் மற்றும் கொலை குற்றவாளியான தினக்குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முத்துரெட்டி கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாடு வாசலில் சிலரால் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார்.

இது தொடர்பான முன்விரோதத்தால் சிலரை பழி தீர்க்கும் நோக்கத்தில் கோதண்டன், தனது நண்பர் ஜெயச்சந்திரனுடன் நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சென்னையில் இருந்து வெடிகுண்டு செயலிழக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு நேற்று நேரில் வந்து மேற்கண்ட நாட்டு வெடிகுண்டை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பிறகு வெடிகுண்டு நிபுணரான இன்ஸ்பெக்டர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இது வெடிக்கும் தன்மை கொண்ட நாட்டு கையெறி வெடிகுண்டு ஆகும். இதில் எந்த மாதிரியான வெடி மருந்து உள்ளது என்பது இப்போது தெரிய வாய்ப்பு இல்லை. கவன குறைவாக கையில் இருந்து தவறி கீழே விழுந்தாலும் வெடிக்கும் தன்மை கொண்டது. அதிகமான வெயிலும், ஈரப்பதமும் இதனை வெடிக்கச்செய்யும். ஈர மண்ணில் கூட வைக்ககூடாது. இந்த வகை வெடி குண்டானது அதனை தயார் செய்யும்போது கூட அதிக இறுக்கத்தால் வெடிக்கும் தன்மை உடையது. இதனை பாதுகாப்பாக வைத்திட வேண்டும். இதை எடுத்து வரும்போது கைகளை கூட வேகமாக அசைத்திட கூடாது. மிகவும் கவனம் தேவை.

மேலும், மரத்தூள் கொட்டப்பட்ட பக்கெட்டில் இந்த நாட்டு வெடிகுண்டை பாதி வெளியில் தெரியும்படி அசையாமல் பாதுகாப்பாக வைத்து பாதுகாத்திட வேண்டும். குறிப்பாக கல்குவாரி அல்லது வெடி மருந்து பொருட்கள் சேமிப்பு பகுதியில் வைத்திட போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும் முறையாக கோர்ட்டு உத்தரவு பெற்ற பிறகுதான் இதனை வெடிக்க செய்திட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்