போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி பலி

போலீசார் எட்டி உதைத்ததில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி பலியானார். திருச்சி அருகே வாகன சோதனையின்போது இந்த விபரீத சம்பவம் நடந்தது.;

Update: 2018-03-07 23:30 GMT
திருவெறும்பூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 40). இவர் தனியார் வங்கியில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உஷா(36). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்லாத நிலையில் உஷா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். இந்தநிலையில் ராஜா தனது மனைவி உஷாவுடன் நேற்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தார். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அவர் ராஜாவை கண்டதும் அவருடைய மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். ஆனால் அவர் அதனை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி கொண்டு திருவெறும்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜீப்பை எடுத்து கொண்டு ராஜாவின் மோட்டார் சைக்கிளை பின்னால் விரட்டி சென்றார்.

திருச்சி-தஞ்சை சாலையில் பாய்லர்ஆலை ரவுண்டானா அருகே வந்தபோது, இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை மறித்து நிறுத்தினார். அப்போது ஜீப்பில் இருந்து கீழே இறங்கி வந்த அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை ஆவேசமாக எட்டி உதைத்தார். இதனால் அவர் நிலைத்தடுமாறி மனைவி உஷாவுடன் சாலையில் விழுந்தார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா படுகாயம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் கலைக்கப்பட்டு ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடித்துடித்து இறந்தார். இந்த சம்பவத்தை பார்த்த பாய்லர்ஆலை ஊழியர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்து படுகாயத்துடன் கிடந்த ராஜாவை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர்.

உடனடியாக போன் செய்து அங்கு ஆம்புலன்ஸையும் வரவழைத்தனர். இதனால் பயந்துபோன போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் அங்கிருந்து ஜீப்பை எடுத்து கொண்டு வேகமாக சென்று விட்டார். இதையடுத்து ராஜாவை ஆம்புலன்ஸில் ஏற்றி ஏற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உஷாவின் உடல் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே போலீசார் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் கீழே விழுந்து பலியான தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது.

இந்த தகவலை கேள்விபட்டு அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி-தஞ்சை சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. உடனே சம்பவ இடத்துக்கு தாசில்தார் ஷோபா, இன்ஸ்பெக்டர்கள் மதன், சண்முகசுந்தரம் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டரோ, போலீஸ் சூப்பிரண்டோ இங்கு வர வேண்டும் என்றும், அதுவரை மறியலை கைவிட மாட்டோம் என்றும் திட்டவட்டமாக கூறினர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ஆரவிந்த் மேனன் அங்கு வந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் திருச்சி- தஞ்சை சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே அந்த பகுதிக்கு வந்த போலீஸ் வாகனத்தின் மீது பொதுமக்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து அந்த வாகனத்தை அங்கிருந்து ஓட்டி சென்று விட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

மேலும் செய்திகள்