பிரதமர் மோடி-எச்.ராஜா உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் 45 பேர் கைது

பிரதமர் மோடி-எச்.ராஜா உருவ படத்தை எரித்து மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா அலுவலகத்துக்கு பூட்டு போடவும் முயற்சி செய்தனர். இது தொடர்பாக 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-07 23:00 GMT
திருச்சி,

பெரியார் சிலை குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- போராட்டம் நடத்தினர். அதன்படி திருச்சி மாநகர மக்கள் கலை இலக்கிய கழக செயலாளர் ஜீவா தலைமையில் பலர் நேற்று மதியம் திருச்சி உறையூர் ஜெயந்தி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு கூடினர். பின்னர் எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் திடீரென்று அவர்கள் ஒன்று சேர்ந்து பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்றனர். அப்போது அங்கிருந்த பா.ஜ.க.வினருக்கும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது மத்திய அரசை கண்டித்து அவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் திடீரென்று பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு பிரதமர் மோடி, எச்.ராஜா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரின் உருவ படங்களை தீ வைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து 13 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட மாநகர் பகுதியில் உள்ள முக்கிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்