வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறிப்பு: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நெல்லையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2018-03-07 20:30 GMT
நெல்லை,

நெல்லையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தொழிலாளி

நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 34). நெல்லை டவுனில் இருக்கும் கூலக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த கடைக்கு அருகே உள்ள நகைக்கடையில் மற்றொரு தொழிலாளி வேலை செய்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் நண்பர் வீட்டுக்கு வேல்முருகன் அடிக்கடி சென்று வந்தார்.

கடந்த 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17–ந் தேதி வேல்முருகன், தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. 32 வயதான நண்பரின் மனைவி மட்டும் அங்கு தனியாக இருந்தார். அப்போது வேல்முருகன், நண்பரின் மனைவியை கட்டிப்பிடித்தார். அவர், வேல்முருகனை தள்ளிவிட்டு ஓடினார்.

பெண்ணை தாக்கி நகை பறிப்பு

இதில் ஆத்திரம் அடைந்த அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணை தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் வேல்முருகன், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டார். மேலும், இதுபற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்முருகனை கைது செய்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை நெல்லை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், வேல்முருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பால்கனி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்