5 தனியார் பீடி நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள 5 தனியார் பீடி நிறுவனங்களில் நேற்று வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Update: 2018-03-07 21:15 GMT
நெல்லை,

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள 5 தனியார் பீடி நிறுவனங்களில் நேற்று வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

பீடி நிறுவனங்கள்

நெல்லை மேலப்பாளையத்தில் செய்யது பீடி, கிங் பீடி, ஜோதிமான் பீடி, சந்திரிகா பீடி, ஜோதிராம் பீடி உள்ளிட்ட பல பீடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் சுற்றும் பீடியை வாங்கி காயவைத்து அதை பண்டல் போட்டு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றன.

கடந்த மாதம் அதிக அளவில் லாபம் ஈட்டியும், பீடி நிறுவனங்கள் முறையாக வணிக வரி, வருமான வரி செலுத்துவதில்லை என்றும், தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்து, பீடித்தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிரடி சோதனை

இந்த நிலையில் நேற்று மதியம் மேலப்பாளையத்தில் உள்ள கிங் பீடி, ஜோதிமான்பீடி, சந்திரிகா பீடி, ஜோதிராம் பீடி ஆகிய பீடி நிறுவனங்களிலும், நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள செய்யது பீடி நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை மண்டல வருமானவரித்துறை துணை ஆணையாளர் மைக்கேல் ஜெரால்டு தலைமையில் 10 குழுக்களாக பிரிந்து மொத்தம் 90 பேர் இந்த சோதனையை நடத்தினார்கள்.

மேலும் இந்த நிறுவனங்களின் கிளை அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும் சோதனை நடத்தினார்கள். வருமானவரி சோதனையையொட்டி அந்த நிறுவனங்களின் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டது. அலுவலகங்களில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், மற்றவர்களை உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முக்கிய ஆவணங்கள் சிக்கின

வருமானவரி அதிகாரிகளின் சோதனையில் இந்த நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. ஒரே நேரத்தில் 5 தனியார் பீடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்