சேலம் விமான நிலைய விரிவாக்க பணி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு

மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2018-03-06 23:48 GMT
ஓமலூர்,

ஓமலூர் அருகே சேலம் விமான நிலைய விரிவாக்க பணி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக வருகிற 25-ந் தேதி இந்த விமான நிலையம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதையொட்டி விமான நிலைய விரிவாக்க பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையத்திற்கான நிலம் 570 ஏக்கரை கையகப்படுத்துவதற்காக 2 தாசில்தார்கள், 2 வருவாய் ஆய்வாளர்கள் உள்பட 10 பேர் கொண்ட அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம் ஆகிய கிராமங்களில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களை மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், விமான நிலையத்திற்கு நிலம் எடுக்க நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரும் ஆய்வு செய்தனர்.

சுமார் 570 ஏக்கர் நிலத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம், கையகப்படுத்தும் நிலத்தில் உள்ள மரம், செடி, பயிர், வீடுகள், இதர கட்டிடங்கள், கோவில்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டனர். மேலும், தும்பிபாடி கிராமத்தில் நன்கு விளையக்கூடிய விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. அதனால், அங்குள்ள விவசாய நிலங்கள் அதற்கான மதிப்பீடுகளையும் ஆய்வு செய்தனர்.

விமான நிலையத்தின் நிலம் எடுப்பு குழுவிற்கு 570 ஏக்கர் நிலங்களின் வரையறைகளை காட்டி அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அளவீடு பணிகளில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கூறும் போது, நிலத்தை கையகப்படுத்தும் போது, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கானமுன்னேற்பாடாக இப்பணிகள்நடந்து வருவதாக தெரிவித்தனர். ஆனால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கக்கூடாது என்று மூன்று கிராம மக்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் இது தொடர்பாக விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்