என் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை என்ன?

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை என்ன? என்று சட்டசபையில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே கேள்வி எழுப்பினார்.

Update: 2018-03-06 22:21 GMT
மும்பை,

மராட்டிய மாநில முன்னாள் மந்திரியாக பதவி வகித்து வந்தவர் பா.ஜனதாவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. இவர் மீது கடந்த 2016–ம் ஆண்டு நிலமோசடி, லஞ்சப் புகார்கள் எழுந்தன. இதே சமயத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டார். இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டார்.

ஆனால் அவர் மீதான எந்த குற்றச்சாட்டும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் ஏக்நாத் கட்சே பேசியதாவது:–

ஒரு அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்ததும் அவர் குற்றவாளி போல நடத்தப்படுகிறார். ஆனால் அது பொய்யான புகார் என்று தெரியவந்ததும், அவர் மீது குற்றம் சுமத்தி பிரச்சினைகளுக்கு ஆளாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

என் தனி உதவியாளர் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாக்கப்பட்டேன். ஆனால் என் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் நான் சி.ஐ.டி., லஞ்ச ஒழிப்பு போலீஸ், லோக் அயுக்தா என பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டேன். ஆனால் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு சாட்சியை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.  

இந்த நிலையில் என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்