‘பேஸ்புக்’கில் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்ணுக்கு அதிர்ச்சி

‘பேஸ்புக்’கில் காதலித்து திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் தனது காதலனை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பீட் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Update: 2018-03-06 22:09 GMT
பீட்,

வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியும், இணையதள வளர்ச்சியும் நமக்கு பல்வேறு நன்மைகளை தந்தாலும் ஒரு விதத்தில் ஆபத்தை கொண்டு வந்து விடுகின்றன. குறிப்பாக வலைதளத்தில் காதல் செய்யும் பலரும் மோசடி வலையிலோ அல்லது ஏமாற்றத்திலோ சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.

இதேபோல ஒரு வினோத சம்பவம் மராட்டியத்தில் நடந்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:–

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு பேஸ்புக்கில் மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். முதலில் நட்பாக ஆரம்பித்த இந்த பேஸ்புக் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு பெற்றோரிடம் அனுமதி கிடைக்காது என்று நினைத்த இவர்கள், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி இளம்பெண் கல்யாண கனவுகளுடன் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு வீட்டிலிருந்து வெளியேறி மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தார்.

ஆனால் தன்னுடன் அன்புடன் பேசி காதல் வளர்த்தவரை நேரில் பார்த்ததும் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார். காரணம் அவர் பேஸ்புக்கில் காதலித்து வந்தது 16 வயதே ஆன 12–ம் வகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெண் தன் திருமண ஏற்பாடுகளை கைவிட்டுவிட்டு, அந்த சிறுவனோடு அவுரங்காபாத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார் என தெரிகிறது.

இதற்கிடையே சிறுவனின் பெற்றோர் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்