கும்பகோணம் அருகே வெறிநாய் கடித்து சிறுவர்- சிறுமிகள் படுகாயம்

கும்பகோணம் அருகே வெறிநாய் கடித்து சிறுவர்- சிறுமிகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-03-06 22:45 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புதுப்படையூரை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி இளவரசி. இவர்களுடைய மகள் இளந்தென்றல் (வயது3). நேற்று காலை அப்பகுதியில் இளந்தென்றல் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக குரைத்தபடி ஓடிவந்த வெறிநாய் ஒன்று இளந்தென்றலை சரமாரியாக கடித்து குதறியது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அலறித்துடித்தாள். இதையடுத்து அந்த சிறுமியை பெற்றோர் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்த அந்த வெறிநாய், மணப்படையூரை சேர்ந்த ராம்கி மகள் காவ்யா (4), சுரேஷ் மகன் சிலம்பரசன் (10) ஆகியோரையும் கடித்து குதறியது.

மருத்துவமனையில் சிகிச்சை

இதில் பலத்த காயம் அடைந்த அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதேபோல சுந்தரபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களை வெறிநாய் கடித்து குதறி உள்ளது. அவர்களுக்கு சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. புதுப்படையூர், மணப்படையூர், சுந்தரபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்- சிறுமிகளை கடித்த அந்த வெறிநாய் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்