நாட்டு வெடிகுண்டுடன் பஸ்சில் சென்ற 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே நாட்டு வெடிகுண்டுடன் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-06 23:15 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த பட்டுபுள்ளி கிராமத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த பஸ்சில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் பயணம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் அந்த பஸ்சை ரெட்டம்பேடு சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அதில் ஏறி சோதனை செய்தபோது ஒரு பேப்பர் பார்சல், கத்தியுடன் பயணம் செய்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் கொலை வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளி கோதண்டன் (வயது 55), தேர்வழி கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (45) என தெரியவந்தது.

மேலும் அவர்கள் வைத்திருந்த பார்சலில் நாட்டு கையெறி வெடிகுண்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நாட்டு வெடிகுண்டையும், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து, எதற்காக அவர்கள் நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பஸ்சில் பயணம் செய்தார்கள்? யாரையாவது கொலை செய்யும் நோக்கத்தில் சென்றார்களா? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டை, கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் அருகே மணல் மூட்டைகளை அடுக்கி பத்திரமாக போலீசார் வைத்து உள்ளனர். இந்த வெடிகுண்டு தன்மை மற்றும் இதன் வீரியம் குறித்து ஆய்வு செய்யவும், அதனை செயல் இழக்க செய்யவும் சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்களை வரவழைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்