சுற்றுலா ஸ்தலமாகும் சங்கரபாண்டியபுரம்: வெளிநாட்டு பறவைகளை பார்க்க கூட்டம் திரளுகிறது

சங்கரபாண்டியபுரம் கிராமத்திற்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகளை பார்த்து ரசிக்க வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் குவிகின்றனர்.;

Update: 2018-03-06 21:45 GMT
தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையை அடுத்த சங்கரபாண்டியபுரம் கிராமத்திற்கு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா நாடுகளிலிருந்து செங்கால்நாரை, கூலைக்கடா உள்ளிட்ட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும். இங்கு ஏராளமான புளியமரங்கள் உள்ளன. இவைகளை தேடி மார்ச் மாத இறுதியில் வெளிநாட்டு பறவைகள் வரும்.

அவை இந்த பகுதியில் காய்ந்த சிறிய முட்செடிகள், புல் பூண்டுகள், சிறிய இரும்பு கம்பிகளைக்கொண்டு மரக்கிளைகளில் கூடு கட்டித்தங்கும். குஞ்சு பொரித்து அவை பறக்க தொடங்கியதும் ஆகஸ்டு மாதம் வாக்கில் தாய்நாடு திரும்பி விடும். இவை இங்கு தங்கி இருக்கும் வரை காகம், மயில் போன்றவற்றை தங்களின் கூடு அருகே அண்ட விடுவதில்லை. மேலும் இவை சொந்த நாட்டுக்கு புறப்படும்போது தங்களது கூடுகளை பிரித்து எறிந்து விட்டு சென்றுவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. கடந்த 30 வருடங்களாக தவறாமல் தொடர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு நிலவிய வறட்சியின் காரணமாக வெளிநாட்டு பறவைகள் வராமல் திசை மாறிய பறவைகளாக சென்றுவிட்டன.

பறவைகளுக்கான குடிநீர் ஆதாரம் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகள் வராதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே பறவைகள் வந்துள்ளன. தங்களது கிராமத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்துள்ளதால் கிராமத்தினர் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

வெளிநாட்டு பறவைகளின் வருகையால் அந்த கிராமம் சுற்றுலா ஸ்தலம் போல் காட்சியளிக்கிறது. வெளியூர் மக்கள் மரத்தில் தங்கியுள்ள பறவைகளை அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும் அவை கூடு கட்டுவதை பார்த்து ரசிக்கின்றனர். காலையிலும் மாலையிலும் கூட்டம் திரளுகிறது.

வெளிநாட்டு பறவைகளை ஒரு விருந்தினர் போல வரவேற்று அந்த பறவைகளை பாதுகாப்பதாகவும் பறவைகளை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக தங்கள் கிராமத்தில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வருவதாக அந்த கிராமத்தினர் தெரிவித்தனர். ஆண்டுதோறும் நிரந்தரமாக பறவைகள் வந்து செல்லும் வகையில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்