வாகனங்கள் செல்லும் போது அதிரும் நேசமணி பாலம் உறுதி தன்மையை பரிசோதிக்க கோரிக்கை

மார்த்தாண்டத்தில் வாகனங்கள் செல்லும் போது நேசமணி பாலம் அதிர்வதால் அதன் உறுதி தன்மையை பரிசோதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2018-03-06 22:45 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் – ஞாறான்விளை சாலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே நேசமணி பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1978 –ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அப்போது, இந்த பாலம்  வழியாக கார், லாரி, இருசக்கர வாகனங்கள் குறைந்த அளவிலேயே சென்று வந்தன. ஆனால் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவிகள் நடந்து செல்லவே பெரிதும் பயன்பட்டு வந்தது.

அதன்பிறகு நீண்ட காலத்திற்கு பின்பு ஒன்றிரண்டு பஸ்கள் இயங்க தொடங்கின. பின்னர் பஸ்களும், கார், வேன் போன்ற வாகனங்களும், கனரக வாகனங்களும் அதிகமாக இயங்க தொடங்கின. தற்போது மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. அதன்படி, மார்த்தாண்டம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இந்த பாலம் வழியாக செல்கின்றன. இதனால் இந்த பாலத்தில் தற்போது போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது.

தற்போது, நேசமணி பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. மார்த்தாண்டத்தில் இருந்து ஞாறான்விளை செல்லும் மார்க்கத்தில் பாலத்தின் தொடக்க பகுதியில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டு, உள்ளே உள்ள பெரிய இரும்பு கம்பிகள் தெரிகின்றன. பாலத்தின் மற்றொரு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து எப்போதும் தண்ணீர் ஒழுகி கொண்டிருப்பதால் அந்த பகுதி சேதமடைந்துள்ளது. அது போல் பாலத்தில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளன.

முக்கியமாக பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது பாலம் பயங்கரமாக அதிர்கிறது. பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் இதை நன்கு உணருகிறார்கள். அப்போது, பாலம் என்ன ஆகுமோ எனஅச்சமடையும் பொதுமக்கள் பாலத்தின் பக்க சுவரை பலமாக பிடித்து கொள்கிறார்கள். இதனால், பாலத்தின் உறுதி தன்மை மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும், பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், தேவைப்பட்டால் இந்த பாலத்தின் அடிப்பகுதியில் ராட்சத தூண்கள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், பாலத்தின் மீது பயணம் செய்யும் பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்