சத்தியமங்கலம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆற்றில் மிதந்த வாலிபர் பிணம், போலீசார் விசாரணை

சத்தியமங்கலம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆற்றில் வாலிபர் பிணம் மிதந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-06 22:15 GMT
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் பவானி ஆற்றில் நேற்று காலை 7 மணி அளவில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் பிணம் மிதந்து வந்தது. இதைப்பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். அப்போது இறந்தவரின் கழுத்து அறுபட்ட நிலையில் இருந்தது. 35 வயது மதிக்கத்தக்க அவர் பச்சை நிற பேண்ட் மற்றும் சந்தன நிற சட்டை அணிந்திருந்தார்.

மேலும் ஈரோடு மாவட்ட தடயவியல் நிபுணர் (பொறுப்பு) ரமேஷ், கைரேகை நிபுணர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்கள் மற்றும் ரேகைகளை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? யாராவது இவரை கடத்தி வந்து கழுத்தை அறுத்து கொலை செய்து பிணத்தை ஆற்றில் வீசிவிட்டு சென்றனரா? அல்லது ஆற்றுக்கு வந்த இவர் தனது கழுத்தில் தானே கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்