தேர்தல் விதிமீறல் வழக்கு விசாரணைக்காக 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 9 பேர் கோர்ட்டில் ஆஜர்

தேர்தல் விதிமீறல் வழக்கு விசாரணைக்காக 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 9 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.

Update: 2018-03-06 23:00 GMT
திருச்சி,

2016 சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களாக கே.என்.நேரு, சவுந்திரபாண்டியன், மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குமார், பழனியாண்டி ஆகிய 5 பேர் அறிவிக்கப்பட்டனர். இதில் பழனியாண்டி தவிர மற்ற 4 பேரும் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

கடந்த 15.4.2016 அன்று இவர்கள் 5 பேர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் உள்பட 9 பேர் சேர்ந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த போது, சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி இல்லை என்றும், அதேபோன்று அரசு பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் 9 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக எம்.எல்.ஏ.க்கள் கே.என்.நேரு, சவுந்திரபாண்டியன், மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட 9 பேர் நேற்று கோர்ட்டுக்கு வந்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு கவுதமன் முன்னிலையில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வருகிற 9-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்காக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் நேற்று கோர்ட்டுக்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்