‘தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வது தவறு’ டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வது தவறு என டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.;

Update: 2018-03-06 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி சொல்வது தவறு. நல்ல தலைவர்களை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ரஜினி அதுபோன்று சொல்லக்கூடாது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சியை ஜெயலலிதா, கையில் எடுத்தபோது அவரையை கட்சியில் இருந்தவர்கள் சிலர் ஒதுக்கினார்கள். பின்னர் ஜெயலலிதா தேர்தலில் நின்று வெற்றி பெற்றதும் ஒதுக்கியவர்கள் கூட கட்சியில் இணைந்தனர். அந்த நிலைதான் இப்போது அ.தி.மு.க.வில் நடந்து வருகிறது.

தந்தை பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பது அரசியல் நாகரீகமற்ற பேச்சு. பெரியார் சிலை மீது கை வைத்தால் தமிழகமே கொதித்து போய்விடும். தமிழகம் கலவரம் இல்லாமல் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. எச்.ராஜா, கலவரத்தை தூண்டும் வகையில் பேசி அவரது கட்சியை வளர்க்க பார்க்கிறார். தேர்தலுக்கு பின்பு எந்த கட்சி நிலைத்து நிற்கும், யார் வீட்டுக்கு போவார்கள் என்று அப்போதுதான் தெரியும் என்றார். 

மேலும் செய்திகள்