மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி கோரி செந்துறையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Update: 2018-03-06 22:45 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள தளவாய் பகுதி வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செந்துறை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், மாட்டு வண்டியில் தளவாய், செங்கமேடு, தெத்தேரி பகுதிகளில் வெள்ளாற்றில் இருந்து மாட்டுவண்டி தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக மணல் அள்ளுவதற்கு போலீசார் வழக்கு போடுவதையும், அபராதம் விதிப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி சீட்டு அளிக்கின்றனர். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் மணல் அள்ளஅனுமதி மறுக்கப்படுகிறது. ஆளுங்கட்சியினர் லாரிகளில் மணல் அள்ளி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

அவர்களுக்கு மணல் குறைந்துவிடும் என்பதற்காகவே மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிந்து வருகின்றனர். எனவே மணல் அள்ள அரசு அனுமதி தர வேண்டும் எனவும் அல்லது அரசே குவாரி அமைத்து நாள் ஒன்றுக்கு ஒரு நடை வீதம் மணல் அள்ள அனுமதி தர வேண்டும்.

இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்