திருவள்ளூர் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 927 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

பிளஸ்–1 தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 ஆயிரத்து 927 மாணவ– மாணவிகள் எழுதுகின்றனர் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Update: 2018-03-06 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துறை , மின்வாரியத்துறை, கல்வித்துறை அலுவலர்களுடன் அரசு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது.

பிளஸ்–1 பொதுத்தேர்வுகள் இன்று(புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் 16–ந் தேதி வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 20 ஆயிரத்து 188 மாணவர்கள், 22 ஆயிரத்து 739 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 927 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 28 மாணவர்களும், முகப்பேர் மேற்கு நேத்திரோதயா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 5 பார்வையற்ற மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்–1 பொதுத்தேர்வுகளுக்காக 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் 17 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கட்டுக்காப்பு மையத்திற்கும் தனித்தனியாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓருவரும், மூத்த முதுகலை ஆசிரியர் ஓருவரும் நியமனம் செய்து மொத்தம் 68 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 20 தேர்வர்கள் கொண்ட அறைக்கு ஒரு அறை கண்காணிப்பாளர் வீதம் 2 ஆயிரத்து 306 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களை தடுக்கும் பொருட்டு 74 பறக்கும் படை உறுப்பினர்களும், 250 நிரந்தர படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்படும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயர்அலுவலர்கள் தேர்வு மையத்தை திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். தேர்வு மையங்கள் அனைத்திலும்மின்விளக்குகள், மின்விசிறிகள் நல்ல முறையில் இயங்க ஏதுவாகவும், சுகாதாரமான குடிநீரை ஓவ்வொரு தேர்வறை முன்பாக குடங்களில் வைக்கவும் , தேர்வு மைய வளாகம், கழிவறைகள் போன்றவை எந்நேரமும் தூய்மையாக வைத்திருக்கவும்  பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படாத ஆவணங்களான செல்போன், கால்குலேட்டர்,  போன்றவற்றை உடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அரசு பொதுத்தேர்வு சார்ந்த புகார்கள் ஏதேனும் இருப்பின் 1077 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்