கூடங்குளம் அருகே வெடிகுண்டு புதையலா? போலீசார் அதிரடி சோதனையால் பரபரப்பு

போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 50 போலீசார் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2018-03-06 21:30 GMT
கூடங்குளம்,

கூடங்குளம் அருகே, நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து புதைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 50 போலீசார் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டுகள் ஏதும் போலீசாரிடம் சிக்கவில்லை.

வெடிகுண்டு புதையலா?

கூடங்குளம் அருகில் உள்ள கூத்தங்குழியில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது போலீசார் தலையிட்டு மோதலை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மோதலில் ஈடுபட்டனர். பின்னர், இருதரப்பு பெரியோர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனாலும், இருதரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடும் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக, நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து, தரையில் புதைத்து வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 போலீசார் சோதனை

இதை தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், முருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், மகேஷ் உள்ளிட்ட 50 போலீசார் கூத்தங்குழிக்கு சென்றனர். அங்கு ஒரு தரப்பினருக்கு சொந்தமான கல்லறை தோட்டம், கடற்கரை, சமுதாய கூடம், காட்டு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

எங்காவது நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டு உள்ளனவா? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பரபரப்பு


 இருந்த போதிலும் அந்த கிராமத்தில் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் நிலவுவதால், மீண்டும் மோதல் ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்