மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அவரது சிறுநீரகம் தஞ்சாவூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன.;

Update:2018-03-06 06:00 IST
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகில் உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு. அந்த பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சாந்தா (வயது 35). இவர்களுக்கு வினித் குரு (15), குரு சர்மிதா (11), குருசரண் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 26-ந் தேதி தூத்துக்குடி பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகுரு, சாந்தா மற்றும் குரு சர்மிதா ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் ரோட்டில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக சிவகுரு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவகுரு, சாந்தா ஆகியோர் காயம் அடைந்தனர்.

இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்திருந்த சாந்தாவுக்கு கடந்த 3-ந்தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி உடல் உறுப்புகளை தானம் செய்ய சிவகுரு சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து சாந்தா நெல்லை சந்திப்பில் உள்ள கிட்னி கேர் சென்டர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். மேலும் அவரது உடல் உறுப்புகளை பெறுவது தொடர்பாக தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அமைப்பிடம் விண்ணப்பித்தனர்.

இதையடுத்து உடல் உறுப்புகளை எந்தெந்த நோயாளிகளுக்கு பொருத்த வேண்டும் என்று அரசு வழிகாட்டியது. அதன்படி சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள் நெல்லை ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். நேற்று பிற்பகல் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மருத்துவக்குழுவினர் சாந்தாவின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்து எடுத்தனர்.

2 சிறுநீரகங்கள், 2 கண்கள் மற்றும் ஒரு கல்லீரல் ஆகியவை எடுக்கப்பட்டன. இதில் ஒரு சிறுநீரகம் அறுவை சிகிச்சை நடந்த அதே ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்குழுவினர் எடுத்துச் சென்றனர். 2 கண்களும் நெல்லையில் உள்ள அகர்வால் கண் ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் எடுத்துச் சென்றனர். ஒரு கல்லீரல் திருச்சியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்த அறுவை சிகிச்சை 3 மணி நேரம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து சாந்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “சாந்தா என்ற பெண் மூளைச்சாவு அடைந்து விட்டதை அடுத்து எங்களது ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இங்கு மூளைச்சாவு அடைந்து விட்டாரா? என்று நரம்பியல் டாக்டர்கள் 2 முறை பரிசோதனை செய்து அதனை உறுதி செய்தனர். அதன் பிறகு உரிய அனுமதி பெற்று அறுவை சிகிச்சை மூலம் உறுப்புகள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டன.

இவை மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெல்லையில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை 8-வது முறையாக நடந்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம், காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதுகுறித்து சாந்தாவின் கணவர் சிவகுரு கூறுகையில், “விபத்து நடந்த போது சாந்தா மயக்க நிலைக்கு சென்று விட்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்து விட்டதால் இனி பிழைக்க மாட்டார் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தேன். இதன்மூலம் சாந்தா இறந்து விட்டாலும், அவர் மற்றவர்களுக்கு உயிர் கொடுப்பதுடன், அவர்கள் உடலில் வாழ்ந்து கொண்டிருப்பார்” என்று கண்ணீர் மல்க கூறினார். இதைபோல் சாந்தாவின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்ணீர் மல்க நின்றிருந்தனர்.

மேலும் செய்திகள்